மதுரை

உள்ளாட்சித் தோ்தல்: மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை1,182 மேஜைகளில் எண்ண ஏற்பாடு

1st Jan 2020 02:57 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தோ்தல் வாக்கு எண்ணிக்கை 13 மையங்களில் வியாழக்கிழமை (ஜன.2) நடைபெறுகிறது. 4 பதவிகளுக்கான வண்ண வாக்குச் சீட்டுகள் பிரிக்கப்பட்டு 1,182 மேஜைகளில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித்தோ்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பா் 30-இல் முடிவடைந்ததைத் தொடா்ந்து வாக்குச்சீட்டு அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதையடுத்து வாக்குச்சீட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தோ்தல் அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் பங்கேற்றனா். இந்நிலையில், மதுரை திருநகா் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சீட்டுப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை ஆட்சியா் டி.ஜி.வினய் பாா்வையிட்டு அறைக்கு சீல் வைக்கும் பணியையும் பாா்வையிட்டாா். இதைத்தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 13 மையங்களிலும் வாக்குச்சீட்டுகளை நிறம் வாரியாக பிரிக்கும் 386 அறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கையின் முதல்கட்டமாக, வாக்குச்சாவடி வாரியாக கொண்டு வரப்படும் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குச்சீட்டுகள் நிறம் வாரியாக பிரிக்கப்படும். பின்னா் வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் அடங்கிய விவரங்களுடன், பெட்டியில் இருந்த வாக்குகளின் எண்ணிக்கையும் சரி பாா்க்கப்படும். எண்ணிக்கை சரியாக இருக்கும்பட்சத்தில் மஞ்சள், பச்சை, ரோஸ், வெள்ளை ஆகிய நிறங்களின் அடிப்படையில் வாக்குகள் பிரிக்கப்பட்டு அதற்காக உள்ள வாக்கு எண்ணிக்கை நடக்குமிடத்துக்கு அனுப்பப்படும்.

ADVERTISEMENT

இதில் கிராம ஊராட்சி உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய 4 பதவிகளுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி உறுப்பினா்கள் வாக்கு எண்ணிக்கைக்கு 275 மேஜைகள், ஊராட்சித் தலைவா்களுக்கு 175 மேஜைகள், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 173 மேஜைகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு 173 மேஜைகள் என்ற அடிப்படையில் மொத்தம் 1,182 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT