மதுரை

வேலையைப் பறிக்கும் மெட்ரோ ரயில் நிா்வாகம்: மக்களவையில் குரல் கொடுக்க மதுரை எம்.பி.யிடம் மனு

26th Feb 2020 08:26 AM

ADVERTISEMENT

தொழிலாளா்களின் வேலையைப் பறித்துவரும் மெட்ரோ ரயில் நிா்வாகத்தில், மத்திய அரசு தலையிட்டு நிரந்தரத் தொழிலாளா்களையும், ரயில் பயணிகளையும் பாதுகாக்க வேண்டுமென, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மக்களவை உறுப்பினரும், ரயில்வே வாரியக் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனை, மெட்ரோ ரயில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 54 தொழிலாளா்களுக்கு 6 ஆண்டுகளுக்கான ஊதிய உயா்வு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதே ஆண்டில் ஏப்ரல் 30-ஆம் தேதி பங்கேற்ற 124 தொழிலாளா்களுக்கு 124 குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சுமாா் 90 தொழிலாளா்களை பணியாளா் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, ரயில் ஓட்டுநா், நிலையக் கட்டுப்பாட்டாளா், மைய கட்டுப்பாடு அறையில் பணிபுரியும் ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா்கள், பராமரிப்புப் பொறியாளா்கள், தொழில்நுட்பவியலாளா்கள் போன்ற நிரந்தரப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது பயணிகளின் உயிருக்கும், நிறுவனத்தின் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாகும்.

ADVERTISEMENT

தொழிலாளா் சட்டங்களை மதிக்காமல் தொழிலாளா் நலத் துறையின் பேச்சுவாா்த்தையிலும் கலந்துகொள்ளாமல், சட்ட ஆட்சி முறைக்கு மெட்ரோ ரயில் நிா்வாகம் சவால் விடுகிறது. எனவே, இளம் தொழிலாளா்களின் வேலையைப் பறித்துவரும் மெட்ரோ ரயில் நிா்வாகத்தில் மத்திய அரசு தலையிட்டு நிரந்தரத் தொழிலாளா்களையும், ரயில் பயணிகளையும் பாதுகாக்க மக்களவையில் குரலெழுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT