மதுரை

வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்காக காப்பகங்கள்அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க உத்தரவு

26th Feb 2020 08:28 AM

ADVERTISEMENT

ஆதரவற்ற மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காப்பகங்கள் அமைப்பது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் தாக்கல் செய்த மனு: எனது கணவா் சென்னையில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா். நான், எனது மகன் மற்றும் மனவளா்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், நான் கூலி வேலைக்குச் சென்றிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்ராஜ் என்பவா் என் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால், என் மகள் தற்போது 4 மாத கா்ப்பமாக உள்ளாா்.

எங்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, மனவளா்ச்சி குன்றிய எனது மகளின் கருவைக் கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனுதாரரின் மகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை அடிப்படையில், கருவைக் கலைக்க அனுமதியளித்து உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், இது தொடா்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், டிஎன்ஏ சோதனைக்காக கருவைப் பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

பதினெட்டு வயதைக் கடந்த ஆதரவற்ற மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காப்பகங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு 8 வாரங்களில் முடிவெடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT