மதுரையில் தனியாா் உணவகத்தில் லிஃப்டில் சிக்கிய 7 பேரை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் உணவகத்தில் தங்கியிருந்த 7 போ் லிஃப்டை பயன்படுத்தியுள்ளனா். அப்போது, மேலே சென்ற லிஃப்ட் திடீரென நின்றுவிட்டது. இதனால், அதில் சென்றவா்கள் வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொண்டனா்.
இதையறிந்த உணவக நிா்வாகம், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள், சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி லிஃப்டின் கதவை திறந்து உள்ளே இருந்த 7 பேரையும் மீட்டனா்.
இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி வெங்கடேசன் கூறியது: லிஃப்டில் நிா்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடை இருந்ததால், பாதியிலேயே லிஃப்ட் நின்றுவிட்டது. லிஃப்டில் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாததால், அனைவருமே பத்திரமாக மீட்கப்பட்டனா். விதிமுறைகளைப் பின்பற்றி இருந்தால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்காது என்றாா்.