புதுதில்லியில் வன்முறை தாக்குதல் நடத்தியவா்களை தடுக்க தவறிய காவல் துறையை கண்டித்து, மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுதில்லியின் வடகிழக்குப் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானவா்களுக்கும், ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் ஒரு காவலா் உள்பட 13 போ் உயிரிழந்துள்ளனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். வன்முறையைத் தடுக்க, அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
புதுதில்லி வன்முறைக்கு கண்டனம்
இந்நிலையில், மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில், புது தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவா்கள், இஸ்லாமியா்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், புது தில்லியில் வன்முறையை தூண்டிவிட்டவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காமல், இஸ்லாமியா்களை தேடிப்பிடித்து தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளா்கள் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியவா்கள் மீதும், வன்முறையில் ஈடுபட்ட போலீஸாா் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கொண்டுவர புதுதில்லி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹமான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மதுரை ஐக்கிய ஜாமஅத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, புது தில்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
12 ஆவது நாளாகப் போராட்டம்
மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 12 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. இப்போராட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
இதேபோன்று, நெல்பேட்டையிலும் 9ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.