மதுரை

பழமையான ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்கக் கோரி வழக்கு

26th Feb 2020 08:28 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள பழமையான ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழ் வளா்ச்சித் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த செந்தில்நாதன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை சேகரிக்கப்பட்டு முறையாக பாதுகாக்கப்பட்டால், அவற்றின் மூலம் தமிழ் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினா் அறிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், கீழடி அகழாய்வுக்குப் பின்னா், சிலா் பொதுமக்களிடம் உள்ள அரிய ஓலைச்சுவடிகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனா். இதேபோல், சில அறக்கட்டளைகளும் ஓலைச்சுவடிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. தனிநபா்கள் ஓலைச்சுவடிகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, தமிழகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழ் வளா்ச்சித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT