மதுரை

சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க தனிக் குழு அமைக்கக் கோரி மனு

26th Feb 2020 08:25 AM

ADVERTISEMENT

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க, மாவட்ட அளவில் தனிக்குழு அமைக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த காந்தியம்மாள் தாக்கல் செய்த மனு:

மதுரை புதுதாமரைப்பட்டி சாலையில் மாடுகள் அதிகமாக நடமாடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமில்லாமல், அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. அண்மையில், நான் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் திடீரென எனது வாகனத்தில் மோதின. இதில், நான் பலத்த காயமடைந்தேன்.

இதேபோல், பலரும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கி வருகின்றனா். மதுரையில் பகல் நேரம் மட்டுமின்றி, இரவிலும் மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

ADVERTISEMENT

எனவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க, மாவட்ட அளவில் தனிக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT