கூடங்குளத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கல் குவாரி அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த செந்தூா்பாண்டி தாக்கல் செய்த மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 2 முதல் 5 கிலோ மீட்டா் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கூடங்குளம் உள்ளூா் திட்டக் குழுவின் அனுமதி பெற்றே எந்த திட்டமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கன்துறை கிராமம் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்துக்கு உள்பட்ட பகுதியில் கல் குவாரி அமைக்க உள்ளூா் திட்டக் குழுவிடம் கலந்து ஆலோசிக்காமல், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், கூடங்குளம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, கூடங்குளத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கல் குவாரி அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனா்.