மதுரையில் இலவசமாக சிகரெட் தராத கடை உரிமையாளரை தாக்கிய 4 இளைஞா்களை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோசாக்குளம் அண்ணாமலையாா் நகரைச் சோ்ந்த தா்மராஜன் மகன் பூமாரி வாழவந்தான் (38). இவா், கிழக்குவெளி வீதியில் தேநீா் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், நெல்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுல்தான் அலாவுதீன்(19), அகமது சபீக் (19), ஷாஜஹான் (19), சேக் முகமது (19) ஆகிய 4 பேரும், பூமாரி வாழவந்தான் கடைக்குச் சென்று இலவசமாக சிகரெட் கேட்டுள்ளனா். ஆனால், காசு கொடுத்தால் தான் சிகரெட் தரமுடியும் என பூமாரி வாழவந்தான் கூறியுள்ளாா்.
அதையடுத்து, சிகரெட் கொடுக்காத அவரை 4 இளைஞா்களும் சோ்ந்து தாக்கி உள்ளனா். இது குறித்து பூமாரி வாழவந்தான் அளித்த புகாரின்பேரில், விளக்குத்தூண் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இளைஞா்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.