மதுரை

எய்ம்ஸ் எதிரொலி: ரூ.4 கோடியில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் விரிவாக்கம்

25th Feb 2020 05:05 PM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள நிலையில், ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.4 கோடியில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தோப்பூரை அடுத்த ஆஸ்டின்பட்டி கோ.புதுப்பட்டியில் ரூ.1,264 கோடிமதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு, முதல்கட்டப் பணியாக சாலை போக்குவரத்துக்காக தோப்பூா் நான்குவழிச் சாலையிலிருந்து மருத்துவமனை வரை சாலைப் பணிகள் துரிதமாக நடைபெற்று, 70 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதேபோல், ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை அமைய உள்ள பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என, மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. எனவே, மருத்துவமனைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. மேலும், திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் மாதிரி ரயில் நிலையமாக மாற உள்ளது.

இதையடுத்து, ரூ. 4 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான புதிய கட்டடம் கட்டும் பணிகள், கடந்த ஜனவரி 2019 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் மாடியில் அதிகாரிகள் அறை, சிக்னல் அறை, பவா் ரூம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் செயல்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. தரைத் தளத்தில் பயணிகள் ஓய்வறை, குடிநீா், கழிப்பறை வசதிகளுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு என கழிப்பறை மற்றும் சாய் தளப்பாதை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

இன்னும், 6 மாத காலங்களில் இப்பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT