மதுரையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது பெண்ணின் கையில் இருந்து தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாண்டியராஜன் குறுக்கு தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ராஜ் கண்ணன்(38). இவருக்கு தேஜஸ்வினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. ராஜ்கண்ணனின் மனைவி, குழந்தையுடன் அனுப்பானடியில் உள்ள தாய் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா். அங்கு ராஜ் கண்ணனின் மாமியாா் லலிதா குழந்தையை தூக்கிக் கொண்டு உப்புக்கார மேடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளாா்.
அப்போது, லலிதாவின் சேலை தண்டவாளத்தில் சிக்கி, அவரும் குழந்தையும் கீழே விழுந்துள்ளனா். இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், குழந்தை தேஜஸ்வினி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது ராஜ்கண்ணன் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.