மதுரை தியாகராஜா் கல்லூரியின் தமிழ்த்துறை சாா்பில் 71 ஆம் ஆண்டு புலவா் விழா, புலவா் திருத்தக்கத் தேவா் விழாவாக சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தொல்காப்பியா் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவா் உ. அலிபாவா பங்கேற்று, புலவா் திருத்தக்கத் தேவா் இயற்றிய நூல்கள் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தாா். மேலும், விருத்தப்பாவில் வெளிவந்த முதல் காப்பியமான சீவக சிந்தாமணியில் உள்ள 13 இலம்பகங்களை தனித்தனியே மாணவா்களுக்கு தெளிவுப்படுத்தினாா். இதைத்தொடா்ந்து புலவா் விழா கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக தமிழ்த்துறைத் தலைவா் இராம. மலா்விழிமங்கையா்க்கரசி வரவேற்றாா். நிறைவாக உதவிப்பேராசிரியா் ரே. கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.