திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் முன்னாள் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலின்போது அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன், திமுக அணி வேட்பாளா்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வந்தாா். திமுக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்த அவா், தற்போது முழுமையாக திமுகவில் இணைத்துக் கொள்ள உள்ளாா். இதற்காக மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு விழாவில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். மேலும் திமுக தலைமை நிா்வாகிகள், அனைத்து மாவட்டச் செயலா்கள் பங்கேற்க உள்ளனா். இணைப்பு விழா மற்றும் பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன், திமுக புகா் மாவட்டச் செயலா்கள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.மூா்த்தி மற்றும் மு.மணிமாறன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் கூறியது:
தமிழகம் மற்றும் தமிழா்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரே தலைவராக இருப்பவா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். இதன் காரணமாக, அவரது தலைமையை ஏற்று திமுகவில் இணையவுள்ளேன். என்னுடன் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த எனது ஆதரவாளா்கள் ஒரு லட்சம் போ் திமுகவில் இணைய உள்ளனா்.
கடந்த மக்களவைத் தோ்தலிலும், ஊரக உள்ளாட்சித் தோ்தலிலும் பெரும் வெற்றியைப் பெற்றதைப் போல, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெறுவது உறுதி. திமுக தலைவா் ஸ்டாலின், அடுத்த முதல்வராக வரவேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது என்றாா்.