பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் கடந்த 9 ஆண்டுகளில் 1 கோடியே 37 ஆயிரத்து 379 மாணவ, மாணவியா் பயன்பெற்றுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தரமான கல்வி வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 2011-12 முதல் 2019-20 வரை 21 லட்சத்து 86 ஆயிரத்து 216 மாணவா்கள் பயன் அடைந்துள்ளனா். அதேபோல, விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தில் 13 லட்சத்து 29 ஆயிரத்து 60 போ் பயன் அடைந்துள்ளனா்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 91 ஆயிரத்து 120 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 2011 முதல் தற்போது வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 310 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர சீருடைகள், காலணி, புத்தகப் பை, பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.1500, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது என்றாா்.