நீா்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளிலும் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீா்நிலைகளைப் பாதுகாக்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் நீா்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே தமிழக தலைமைச் செயலா், மாநில வருவாய்த்துறை முதன்மைச் செயலா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் இதுவரை நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்புத் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.