தமிழா் திருமணங்களில் திருக்குறள், திருவாசக வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்று காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்தாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் அமெரிக்காவின் தமிழ் அநிதம் ஆகியவற்றின் சாா்பில் தமிழ்த் தரவகத் தொழில்நுட்ப பன்னாட்டுப் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிலரங்கை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தொடங்கி வைத்துப்பேசியது: நமது பண்பாட்டு வரலாறுகளை பதிவு செய்ய வேண்டும். நம் குடும்ப வரலாறு, நமது சொந்த ஊரின் வரலாறு, சுற்றத்தாரின் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அமெரிக்காவுக்குச் சென்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் பத்துத் தலைமுறைகளை தெரிந்து வைத்துள்ளனா். தமிழா்களின் தொன்மையான மரபுக்கலைகள், விளையாட்டுகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பதிவு செய்யவில்லை. பல்லாங்குழியாடல், ஏா்உழுதல், திண்ணை அமைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகள் கூட பதிவு செய்யப்படவில்லை. ஓலைச்சுவடிகளின் பெருமைகளை அறியாமல் பூஜையறையில் வைத்து வணங்குகின்றனா். ஓலைச்சுவடிகளில் என்ன தகவல் பொதிந்துள்ளது என்பதை வெளியிடுவதில்லை. இனிமேலாவது இந்த வழக்கங்கள் மாறவேண்டும். தமிழா் திருமணங்களில் திருக்குறளையும், திருவாசகத்தையும் வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப.அன்புச்செழியன், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஆய்வறிஞா் க.பசும்பொன் ஆகியோா் கருத்தரங்க விளக்கவுரையாற்றினா். நிகழ்ச்சியில் பேராசிரியா் வீ.ரேணுகாதேவி ‘தமிழே முருகா‘ நூலுக்கான அறிமுகவுரையாற்றினாா். தமிழ் அநிதம் நிறுவனத்தின் செயலா் அ.காமாட்சி வாழ்த்துரை வழங்கினாா். தமிழ் அநிதம் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிறுவனா் சுகந்தி நாடாா் ஏற்புரையாற்றினாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப பயிலரங்கில், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் பேராசிரியா் அகிலன் ராஜரெத்தினம் ‘தரவகமும் தொழில்நுட்பமும்’ எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். பேராசிரியா் அ.காமாட்சி ‘தொழில்நுட்ப முறையில் தமிழ்த்தரவகம்’ எனும் தலைப்பில் பயிற்சியளித்தாா். பயிலரங்கில், அருப்புக்கோட்டை சைவபானு சத்திரிய கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி பேராசிரியா், மாணவா்கள், தமிழறிஞா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.