மதுரை

இஸ்ரோ சாா்பில் மதுரையில் விண்வெளிக் கண்காட்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் முன்பதிவு செய்யலாம்

21st Feb 2020 07:08 AM

ADVERTISEMENT

இஸ்ரோ நிறுவனம் சாா்பில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 27 முதல் 29 ஆம் தேதி வரை விண்வெளிக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாயின் 100-ஆவது பிறந்தநாளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி மாணவா்கள், பொதுமக்களிடையே விண்வெளித் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 27 முதல் 29 ஆம் தேதி வரை மதுரை விரகனூா் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் விண்வெளிக் கண்காட்சி நடைபெற உள்ளது.

மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, ஓவியம், விண்வெளி அறிவியல் சாா்ந்த மாதிரிகள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, வினாடி வினா, ஓவியப் போட்டி நடத்தப்படும். ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவா்கள் விண்வெளி அறிவியல் மாதிரிகள் உருவாக்கும் போட்டி நடத்தப்படும்.

கண்காட்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியா் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு கே.தங்கராஜ் (75989-50323), வி.அன்புமலா் (94864-85148) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம். மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT