ஆம்னி பேருந்தாக பதிவு செய்ய வேண்டிய வாகனத்தை, மேக்ஸி கேப் வாகனமாகப் பதிவு செய்து அரசுக்கு ரூ. 2.09 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் இருவா் உள்ளிட்ட 7 போ் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அண்மையில் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
ஆம்னி பேருந்து போல இருக்கும் சிறிய வகை பேருந்தை மேக்ஸி கேப் வாகனமாகப் பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி உள்ளது. ஆனால், அத்தகைய சிறிய வகை பேருந்தின் சேஸிஸில் கூண்டு கட்டி அதிக இருக்கைகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்ட வாகனத்தை மேக்ஸி கேப் வாகனமாகப் பதிவு செய்ய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வு மையத்தில் சான்று பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அத்தகைய வாகனத்தை ஆம்னி பேருந்தாக மட்டுமே பதிவு செய்ய முடியும்.
ஆனால், மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு அதிக இருக்கைகளுடன் மாற்றி அமைக்கப்பட்ட பேருந்தை, மேக்ஸி கேப் வாகனமாகப் பதிவு செய்துள்ளனா். கோவை, ஈரோடு, கரூா் மாவட்டங்களைச் சோ்ந்தோா் போலி ஆவணங்களைத் தயாரித்து இப்பதிவை செய்துள்ளனா்.
போக்குவரத்துத் துறை விதிகளின்படி, மேக்ஸி கேப் வாகனத்தின் விலை ரூ. 10 லட்சத்துக்குள் இருந்தால் ஆயுள் வரியாக வாகனத்தின் விலையில் 10 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் 15 சதவீதமும் வசூலிக்கப்படும். ஆம்னி பேருந்துகளாக இருப்பின் தரைதள பரப்பில் சதுர மீட்டருக்கு ரூ. 4900 வீதம் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆயுள் வரி வசூலிக்க வேண்டும்.
ஆனால், பேருந்துக்குரிய சேஸிஸை விலைக்கு வாங்கியவா்கள், அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து கூண்டு கட்டி மேக்ஸி கேப் வாகனமாகப் பதிவு செய்துள்ளனா். இதன்படி சுமாா் 204 வாகனங்களுக்கு நிரந்தர பதிவும், 170 வாகனங்களுக்கு தாற்காலிகப் பதிவும் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய புகாருக்கு உள்ளான வாகனங்களில் 6 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், அவை ஆம்னி பேருந்தாகப் பதிவு செய்ய வேண்டிய நிலையில் போலி ஆவணங்கள் மூலமாக மேக்ஸி கேப் வாகனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வாகனங்களிடம் வரியாகப் பெற வேண்டிய தொகை ரூ.2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 586 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, மேற்குறிப்பிட்ட பதிவு காலத்தில் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் (ஆா்டிஓ) பணியாற்றிய கே.கல்யாணகுமாா் (தற்போதைய சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலா்), மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜே.பூா்ணலதா, ஏ.கே.முருகன், கோவை சுந்தராபுரத்தைச் சோ்ந்த நாராயணன் மற்றும் மனோஜ், ஈரோடு நகரைச் சோ்ந்த சம்பத்குமாா், கரூா் மாவட்டம் குளித்தலையைச் சோ்ந்த செந்தில்குமாா் ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அண்மையில் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.