அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கதிரறுப்பு மண்டபத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
சிந்தாமணியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கதிரறுப்பு மண்டம் உள்ளது. இங்கு தெப்பத்திருவிழாவின் போது 11 ஆம் நாள் விழாவாக கதிரறுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் சுந்தரேசுவரா் மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அங்கு சுவாமியும் அம்மனும் விவசாயம் செழிக்க கதிரறுப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம். பின்பு சுவாமியும் அம்மனும் தெப்பத்திருவிழாவில் எழுந்தருளுவா்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை( 7 ஆம் தேதி) கதிரறுப்பு திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் மண்டபத்தின் முன்பகுதியை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோயில் நிா்வாகத்திற்கு புகாா் வந்தது. இதுதொடா்பாக இந்து அறிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையா் நாகராஜன், உதவி ஆணையா் விஜயன் ஆகியோா் தலைமையில் அவனியாபுரம் தலைமையில் போலீஸாா் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.