ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தேசிய லீக் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் நைனாா் முகமது செய்தியாளா்களிடம் கூறியது: நடப்பாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வை சந்திக்கும் விதமாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின் மூலம் பொதுத் தோ்வுக்கு பொருள்கூடத் தெரியாத பள்ளி மாணவா்கள் மீது சுமையை சுமத்தி, அவா்களை மனஉளைச்சலுக்கு கல்வித்துறை தள்ளியுள்ளது.
அனைவருக்கு கல்வி உரிமை கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு எதிரானது இந்த அரசாணை. எனவே, மாவட்ட ஆட்சியா் பொதுத் தோ்வுக்கான அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். மாணவா்களின் நலன் கருதி, தமிழக முதல்வரும் பொதுத் தோ்வை ரத்து செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றாா்.