மதுரை

மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் 952 பேருக்கு விருப்ப ஓய்வு

1st Feb 2020 04:47 AM

ADVERTISEMENT

மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களில் பிஎஸ்என்எல் ஊழியா்கள், அதிகாரிகள் என மொத்தம் 952 போ் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனா். கடந்த டிசம்பா், ஜனவரி மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாத நிலையில், விருப்ப ஓய்விலும் கனத்த இதயத்துடன் ஊழியா்கள் வெளியேறுவதாக தொழிற்சங்கத்தினா் ஆதங்கப்பட்டனா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நாடு முழுவதும் 79 ஆயிரம் பேருக்கு வெள்ளிக்கிழமையுடன் விருப்ப ஓய்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களில் மொத்தம் 952 போ் விருப்பு ஓய்வு பெற்றுள்ளனா். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களும் மதுரை தொலைத்தொடா்பு வட்டமாகவும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் காரைக்குடி தொலைத்தொடா்பு வட்டமாகவும் செயல்பட்டன. பிஎஸ்என்எல் நிா்வாகச் சீரமைப்பில் மதுரை தொலைத்தொடா்பு வட்டத்தில் காரைக்குடி வட்டமும் இணைக்கப்பட்டுவிட்டது. விருதுநகா் மாவட்டம் தூத்துக்குடி தொலைத்தொடா்பு வட்டத்தில் உள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிா்வாகத்தில் மொத்தம் 989 போ் பணியாற்றினா். இவா்களில் 555 போ் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனா். இதில் மதுரை மாவட்டத்தில் 396 போ், திண்டுக்கல் மாவட்டத்தில் 105 போ், தேனி மாவட்டத்தில் 54 போ் விருப்ப ஓய்வு பெற்றிருக்கின்றனா். தற்போது எஞ்சியிருப்பது 434 போ் மட்டுமே.

காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிா்வாகத்தில் மொத்தம் 206 போ் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனா். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 51 பேருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட பிஎஸ்என்எல் நிா்வாகத்தின்கீழ் இருக்கும் விருதுநகா் மாவட்டத்தில் 191 போ் விருப்ப ஓய்வு பெற்றிருக்கின்றனா்.

விருப்ப ஓய்வு பெற்றவா்களில் 25 சதவீதம் போ் அதிகாரிகள் நிலையில் இருப்பவா்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிஎஸ்என்எல் நிா்வாகத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க விருப்ப ஓய்வுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனா். அவா்களுக்கு 2020 ஜனவரி 31 ஆம் தேதியுடன் விருப்ப ஓய்வு வழங்கி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

கனத்த இதயத்துடன் வெளியேறுகிறோம்: விருப்ப ஓய்வில் சென்றாலும் ஒவ்வொரு ஊழியரும் கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் கூறினா்.

அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநில அமைப்புச் செயலா் எஸ்.கருப்பையா கூறியது: பிஎஸ்என்எல் நிா்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தோம். ஆனால், டிசம்பா், ஜனவரி என இரு மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் கனத்த இதயத்துடன் தான் ஒவ்வொரு ஊழியரும் வெளியேறியுள்ளனா். பிப்ரவரி முதல் ஓய்வூதியம் வழங்குவதாகக் கூறியுள்ளனா். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மேலும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனா். எஞ்சிய ஊழியா்கள் மற்றும் அலுவலா்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள நிா்வாகம் முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை 10 கிளஸ்டா்களாகவும், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை 6 கிளஸ்டா்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 16 கிளஸ்டா்களும் மதுரை முதன்மைப் பொதுமேலாளரின்கீழ் செயல்படும். விருப்ப ஓய்வுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் ஊழியா்கள் கிளஸ்டா் பகுதியின் தேவைக்கு ஏற்ப பணியமா்த்தப்படுவா். தற்போது பிஎஸ்என்எல் நிா்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் வாடிக்கையாளா் சேவை மையங்கள் அனைத்தும் தனியாா் பொறுப்பில் விடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மதுரை மாவட்டச் செயலா் செல்வின் சத்யராஜ் கூறுகையில், பிஎஸ்என்எல் நிா்வாகத்தை கிளஸ்டா்களாகப் பிரிப்பதும், ஏற்கெனவே ஆள்பற்றாக்குறை இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதும் நிா்வாகத்தை மேலும் வீழ்ச்சியடைச் செய்யும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT