திருமங்கலத்தில் இருந்து எம்.ஜி.ஆா்பேருந்து நிலையம் செல்லும் 4 வழி சாலையில் கேட்பாரற்று இருந்த பதிவெண் இல்லாத ஜீப் மற்றும் 160 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.
திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் ஆகியவை தென் மாவட்டங்களுக்கு டேங்கா் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து புறப்படும் டேங்கா் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் திருடப்படுவதாக பலமுறை புகாா்கள் வந்துள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருமங்கலம் -எம்.ஜி.ஆா் பேருந்து நிலையம் சாலையில் பதிவெண் இல்லாத ஜீப் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் அருகே 5 போ்கொண்ட கும்பல் இருந்துள்ளனா். போலீஸாரைக் கண்டவுடன்அவா்கள் தப்பி ஓடினா். சோதனையில், ஜீப்பில் 40 லிட்டா் கொள்ளளவுள்ள 16 கேன்கள் இருந்தன. அவற்றில் 4 கேன்களில் 160 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது. இவற்றை போலீஸாா் கைப்பற்றி திருமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்தனா்.இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.