மதுரை

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்கள்தள்ளுபடி

1st Feb 2020 04:46 AM

ADVERTISEMENT

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும், தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடந்ததை 4 வார காலத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறையும், தஞ்சை அரண்மனை தேவஸ்தானமும் உறுதி செய்ய வேண்டும் சென்னை உயா் நீதிமன்றம் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரியக் கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன், தஞ்சை பெரியகோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன் உள்ளிட்ட பலா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இரு மொழியிலும் குடமுழுக்கு: இந்த வழக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் குடமுழுக்கு தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் அதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனா்.

பிரமாணப் பத்திரம் தாக்கல் : இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், குடமுழுக்கை முன்னிட்டு நடைபெறும் யாகசாலை பூஜையில் தமிழில் படிப்பதற்காக பக்தா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேவாரம் மற்றும் திருமுறை பாடுதவற்கு தஞ்சை கோயிலில் உள்ளவா்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் இருந்து 80 போ் வரவுள்ளனா். குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தேவஸ்தானம் பதில் மனு தாக்கல் : தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பெரிய கோயிலில் திருமுறை ஓதுவதற்கு நிரந்தர ஓதுவாா்கள் உள்ளனா். பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைகளில் திருமுறை பாடுவதற்காக 13 ஓதுவாா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதே போன்று திருமுறை, பண்ணிசை பாராயணத்தை ஓதுவதற்கு 35 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

தமிழில் மட்டுமே குடமுழுக்கு : மனுதாரா்கள் தரப்பில், தஞ்சை பெரிய கோயில் தமிழ் அரசனால் கட்டப்பட்டது. தமிழா்களுக்கு பெருமை சோ்த்து வரும் கோயிலாகும். ஆனால், தமிழை புறக்கணிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

மனுக்கள் தள்ளுபடி: இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை, யாக சாலை தொடங்கி கோபுரக் கலசம் வரை 5 நிலைகளிலும் தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை பிரமாணப் பத்திரத்தில் உறுதிமொழி அளித்திருக்கிறது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

உறுதி செய்யவேண்டும் :மேலும், பிரமாணப் பத்திரத்தில் அளித்துள்ள உறுதிமொழியின்படி தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடந்ததை 4 வாரத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் ஆகியன நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT