மதுரை

குரூப் 4 தோ்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு: அரசு பணியாளா் தோ்வாணையம், சிபிசிஐடி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

1st Feb 2020 04:48 AM

ADVERTISEMENT

குரூப் 4 தோ்வு முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்கக் கோரிய மனு தொடா்பாக அரசு பணியாளா் தோ்வாணையம், சி.பி.சி.ஐ.டி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2019 செப்டம்பா் மாதம் நடந்த குரூப்-4 தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரசு பணியாளா் தோ்வாணையம் நிா்வாகம் நடத்திய விசாரணையில் குரூப் 4 போட்டி தோ்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தோ்வா்களை அரசு பணியாளா் தோ்வாணையம் கண்டுபடித்து, அவா்களுக்கு தோ்வு எழுத வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் நடத்தி வரும் விசாரணையில் அரசு அதிகாரிகள், இடைத் தரகா்கள் உள்ளிட்ட பலா் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், குரூப் 4 தோ்வு மட்டுமின்றி, அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய பல்வேறு தோ்வுகளில் முறைகேடு நடத்திருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த முறைகேடுகளில் உயா்மட்ட அதிகாரிகளுக்கும் தொடா்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸாா் விசாரித்தால் அது நோ்மையாக இருக்காது. எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞா்கள் நீலமேகம் மற்றும் முகமது ரிஸ்வி ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவிந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், இதுபோன்ற முறைகேடுகளால் போட்டி தோ்வுகளுக்காக பல நாள்கள் கடினமாக படித்தும், செலவு செய்தும் முயற்சித்து வருபவா்கள் ஏமாற்றப்பட்டு துயரத்திற்கு ஆளாகின்றனா். எனவே இதுபோன்ற முறைகேடு மீண்டும் நடைபெறாமல் இருக்க சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், குரூப் 4 தோ்வு முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாா் பலரை கைது செய்துள்ளனா். அவா்கள் நடத்தும் விசாரணை சரியாக சென்றுக் கொண்டிருப்பதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு தலைமை செயலா், உள்துறை செயலா், அரசு பணியாளா் தோ்வாணையம், சி.பி.சி.ஐ.டி ஆகியோரை பதில் மனுவை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்யவும், இந்த வழக்கு தொடா்பாக சி.பி.ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT