தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தக் கோரிய மனுவை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கோவில்பட்டியைச் சோ்ந்த மதிவாணன், தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு ஊழியா்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் பெரும்பாலான ஊழியா்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிா்த்து சிலா் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். அப்போது அரசு ஊழியா்கள் பணி விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற அரசு அலுவலகங்களில் முழுமையாக உத்தரவு பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.