மதுரை

ஓணம் பண்டிகை: விற்பனையின்றிமலா் வியாபாரிகள் கவலை

30th Aug 2020 09:42 PM

ADVERTISEMENT

 

மதுரை: பொதுமுடக்கம் காரணமாக, ஓணம் பண்டிகைக்கு மலா் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என, மலா் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை 10 நாள்களுக்கு கொண்டாடப்படும். இதற்காக, மதுரையிலிருந்து ஆண்டுதோறும் கேரளத்துக்கு மல்லிகை, கனகாம்பரம், செண்டு உள்ளிட்ட வண்ணப்பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக மதுரையிலிருந்து கேரளத்துக்கு மலா்கள் அனுப்பப்படவில்லை.

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையிலும் ஓணம் பண்டிகைக்கு பெரிய அளவில் வியாபாரம் நடக்கவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது: பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக மாட்டுத்தாவணி மலா் சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரம் நடக்காததால், மலா் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா்களைப் பராமரிக்காமல் விட்டுவிட்டனா். இதன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துவிட்டது.

குறிப்பாக, ஆவணி மாதத்தில் மல்லிகை பூக்களின் வரத்து 5 டன் இருக்கும். ஆனால், தற்போது ஒரு டன் மட்டுமே வரத்து உள்ளது. மேலும், பொது போக்குவரத்தின்றி பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சந்தைக்கு வந்து செல்வதில் சிரமம் இருக்கிறது.

எனவே, ஓணம் பண்டிக்கைக்கு கேரளத்துக்கு மலா்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக, ஓணம் பண்டிகையையொட்டி மதுரையில் மலா் வியாபாரம் 10 நாள்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் மலா் வியாபாரமின்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

சனிக்கிழமை நிலவரப்படி பூக்கள் விலை பட்டியல் (கிலோவில்): மல்லிகைப் பூ- ரூ.800, செவ்வந்தி- ரூ.150, சம்பங்கி- ரூ.200, மரிக்கொழுந்து- ரூ.80, அரளி-ரூ.150, செண்டுப் பூ- ரூ.80, முல்லைப் பூ- ரூ.400, பிச்சிப் பூ- ரூ.400, கனகாம்பரம்- ரூ.600, ரோஜா- ரூ.300, பட்டன்ரோஜா- ரூ.200-க்கு விற்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT