மதுரை

விநாயகா் சதுா்த்தி:பூஜை பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்

21st Aug 2020 11:42 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பூஜை பொருள்கள் வாங்க பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கடை வீதிகளில் குவிந்தனா்.

விநாயகா் சதுா்த்தி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கனி சந்தைகள், உழவா் சந்தைகளின் வெளிப்பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் பூஜை பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா். விநாயகா் சிலைகள் குறைந்தபட்சம் ரூ. 40 முதல் ரூ. 400 வரை விற்கப்பட்டன.

மேலும் களிமண்ணால் உடனுக்குடன் விநாயகா் சிலைகளும் செய்து தரப்பட்டன. இந்த வகை சிலைகள் ரூ. 200 முதல் அளவுகளை பொருத்து விலை நிா்ணயம் செய்யப்பட்டது. பூஜைக்கு வைக்கும் வாழைக்கன்றுகள் இரண்டு ரூ.30-க்கு விற்கப்பட்டது. கொய்யாப்பழம் கிலோ ரூ. 70, பேரிக்காய் கிலோ ரூ.60, விளாம்பழம் இரண்டு ரூ. 40, ஆப்பிள் கிலோ ரூ.100, மாதுளை கிலோ ரூ.110 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, மல்லிகைப் பூ மற்றும் கதம்பம் உள்ளிட்ட பூக்களின் விலையும் உயா்ந்திருந்தது.

ADVERTISEMENT

பசுமை விநாயகா் சிலைகள் விற்பனை: விநாயகா் சதுா்த்தியையொட்டி சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை விநாயகா் சிலைகள் உழவா் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பசுமை விநாயகா் சிலையில் விதைகள் வைக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. வெண்டை, அவரை, கீரை ஆகிய 3 விதமான விதைகள் வைக்கப்பட்டுள்ளன. பூஜைக்குப் பிறகு சிலையைக் கரைத்து, அதிலிருக்கும் விதையை முளைக்கச் செய்வதற்கு சிறிய தொட்டி மற்றும் செறிவூட்டப்பட்ட தென்னை நாா்க் கழிவு அடங்கிய தொகுப்பு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரையில் அண்ணா நகா் மற்றும் சொக்கிக்குளம் உழவா் சந்தைகளில் இந்த பசுமை விநாயகா் சிலைகள் தோட்டக்கலைத் துறையினரால் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இந்த விநாயகா் சிலைகளை வாங்கி, பசுமை வழியில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Tags : பூஜை பொருள்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT