மதுரை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு:காவலா்கள் ஜாமீன் மனு மீது சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

21st Aug 2020 10:08 PM

ADVERTISEMENT


மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை  வழக்கில்  சிறையில் உள்ள காவலா்கள் முத்துராஜ் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோா் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இச்சம்பவம் கொலை வழக்காகப்  பதிவு செய்யப்பட்டு 10 போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

தற்போது இந்த வழக்கு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலா்கள் திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துராஜ் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோா் ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா். அதில், வழக்கு தொடா்பான தடயங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை முடிந்துள்ளது. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு, நீதிபதி வி. பாரதிதாசன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதி, இது தொடா்பாக சிபிஐ பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

Tags : சாத்தான்குளம் வழக்கு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT