மதுரை

மணல் கடத்தலைத் தடுக்க உயா்நீதிமன்ற உத்தரவுகளை அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை: அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராக உத்தரவு

21st Aug 2020 10:04 PM

ADVERTISEMENT


மதுரை: மணல் கடத்தலைத் தடுக்க, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராக உத்தரவிட்டனா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாதவன் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டம்  புஞ்சைபுகழூா், தளவாபாளையம் கிராமத்தினா், விவசாயத்துக்கும், குடிநீா்த் தேவைக்கும், காவிரி ஆற்று நீரைப் பயன்படுத்தி வருகின்றனா். இக்கிராமத்தையொட்டி உள்ள காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிப்படைந்து, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம். சத்யநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மணல் கடத்தல் தொடா்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்து, கரூா் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான பதில் மனுவைத் தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள், மணல் கடத்தல் தொடா்பாக வழக்குகள் மட்டும் பதிவு செய்தால் போதுமா, வாகனங்கள் எப்போது பறிமுதல் செய்யப்படும்?

ADVERTISEMENT

மணல் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீா்கள் எனக் கேள்வி எழுப்பினா்.

மணல் கடத்தலைத் தடுக்க உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இவற்றை அரசு கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. சிவகங்கை மற்றும் கரூா் மாவட்டங்களில் அதிக அளவில் மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

உயா்நீதிமன்றத்தில் நாள்தோறும் 5 வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. மணல் கடத்தலைத் தடுக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். எனவே, பொது நலன் கருதி இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Tags : உயா்நீதிமன்றம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT