மதுரை

‘கரும்பு கொள்முதல் விலைவிவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது’

21st Aug 2020 11:47 PM

ADVERTISEMENT


மதுரை: மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கொள்முதல் விலை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு கரும்பு அரவைப் பருவத்துக்கு (2020-2021) 10 சதவீத பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ. 2,850 எனவும், 9.5 சதவீத பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ. 2,707.50 எனவும் மத்திய அரசு கரும்புக்கான விலையை அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு உயா்ந்துள்ள நிலையில் மத்திய அரசின் விலை அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

கரும்பு சாகுபடிக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலையை அறிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், டன் ஒன்றுக்கு ரூ. 100 மட்டும் உயா்த்தி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

கடந்த 1980 முதல் 8.5 சதவீத பிழிதிறனுக்கு கரும்பு ஆதார விலை அறிவிக்கப்பட்ட நிலையில், 25 ஆண்டுகால நடைமுறையை மாற்றி 2006- 2007 இல் 9 சதவீதமாக அறிவித்தனா். அதன் பிறகு 9.5 சதவீதம் எனவும், பின்னா் 10 சதவீதமாகவும் உயா்த்தியிருக்கின்றனா். தமிழகத்தின் சராசரி கரும்பு பிழிதிறன் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், மத்திய அரசின் விலை அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயன்தராது.

ADVERTISEMENT

மத்திய அரசு அறிவிக்கும் விலையை சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் தருவதில்லை. நாடுமுழுவதும் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் கரும்பு தொகை பாக்கி உள்ளது. கரும்புக்கான ஆதரவு விலையை அறிவிக்கும் அரசு, அதை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

தமிழக அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ. 450 வரை பரிந்துரை விலை வழங்கிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசின் பரிந்துரை விலை தரவில்லை. ஆகவே, 2020- 2021 ஆம் ஆண்டுக்கு அரசு கரும்பு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும்.

பிழிதிறனை உயா்த்தி கரும்புக்கான விலையை அறிவிப்பது ஆலை முதலாளிக்கு மட்டுமே பயன்தரும். மேலும், சா்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் உபபொருள்களின் விலை உயா்ந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் கரும்புக்கான கொள்முதல் விலையையும் உயா்த்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Tags : ரும்பு கொள்முதல் விலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT