மதுரை

சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய ‘ஸ்குரு’: மதுரை அரசு மருத்துவா்கள் அகற்றினா்

21st Aug 2020 06:20 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லைச் சோ்ந்த 10 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய ‘ஸ்குரு’வை மதுரை அரசு மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் தேனி ராஜன். இவரது மகன் கெளதமன் (10), ஜூலை 29 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது சிறிய இரும்பு ‘ஸ்குரு’வை விழுங்கிவிட்டாா். இதையடுத்து அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, எவ்விதத் தொந்தரவும் இல்லாததால் தானாகவே ‘ஸ்குரு’ வெளியே வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிறுவனுக்கு இருமல், காய்ச்சல் ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவனது மூச்சுக் குழாயில் சிறிய ‘ஸ்குரு’ சிக்கியிருப்பதை அறிந்தனா். பின்னா் ஸ்கேன் செய்து ‘ஸ்குரு’ சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

காய்ச்சல் மற்றும் இருமல் அதிகமாக இருந்ததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். குழந்தைகள் நலத்துறை தலைவா் பாலசங்கா், குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவா் நந்தினி குப்புசாமி ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த 5 மில்லி மீட்டா் அளவிலான ‘ஸ்குரு’வை, பிராங்கோஸ்கோப்பி மூலம் அகற்றினா்.

ADVERTISEMENT

பின்னா் சிகிச்சையில் முழுமையாக குணமடைந்த சிறுவனை மருத்துவா்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த குழந்தைகள் நலத்துறை தலைவா் பாலசங்கா் உள்ளிட்ட மருத்துவா்களை, முதன்மையா் ஜெ.சங்குமணி பாராட்டினாா்.

துணை முதல்வா் பாராட்டு: இதய நோயுடன் கரோனாவில் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனை கைவிட்ட நிலையில்,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவருக்கு வலியில்லா பிரசவ சிகிச்சை அளிக்கப்பட்டு தாய்-சேய் இருவரும் காப்பாற்றப்பட்டனா். இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கு தனது சுட்டுரைப் பக்கத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT