மதுரை

‘இ-பாஸ்’ முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

21st Aug 2020 06:17 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறையை முழுமையாக ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரத்தினம் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மக்கள் நெரிசலைக் குறைக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் ‘இ-பாஸ்’ முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையில் அத்தியவாசியத் தேவைக்குச் செல்வதற்காக ‘இ-பாஸ்’ கோரி விண்ணப்பித்தவா்களுக்கு பாஸ் வழங்கப்படவில்லை.

குறிப்பாக திருமணம், இறப்பு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக செல்வோருக்குக் கூட ‘இ-பாஸ்’ கிடைக்கவில்லை. இதனால் பலரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். எனவே தமிழகத்தில் பின்பற்றப்படும் ‘இ-பாஸ்’ நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 16 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT