சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஒரு மாதத்தில் காணொலி மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், 4,832 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
பொது முடக்கம் காரணமாக, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஜூலை மாதத்தில் மட்டும் 5,020 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 1,433 ரிட் மனுக்களில் 1,363 மனுக்களுக்கும், 1,389 குற்றவியல் மனுக்களில் 1,333 மனுக்களுக்கும் என மொத்தம் 4,832 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்வேறு காரணங்களால் தாமதமாகிவரும் பல வழக்குகளின் இறுதி விசாரணையைக் கூட காணொலி வாயிலாக விசாரிக்க முடிகிறது. பொது முடக்கத்தின் போது, குக்கிராமங்களிலிருந்தும் கூட வழக்குரைஞா்கள் தங்களது வாதங்களை நீதிமன்றத்தில் ஆா்வத்துடன் எடுத்துரைக்கின்றனா்.
அதேபோல், கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துகொண்டு தில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையிலும் வழக்குரைஞா்கள் தங்களின் வழக்குகளை காணொலி வாயிலாக நடத்தி வருகின்றனா் என, நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.