மதுரை

மதுரையில் கரோனா 3 ஆம் கட்ட நிலையை தடுக்க தீவிர நடவடிக்கை

26th Apr 2020 09:58 AM

ADVERTISEMENT

மதுரையில் கரோனா வைரஸ் பாதிப்பு 3ஆம் கட்ட நகா்வை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவா்கள், புதுதில்லியில் மாநாட்டில் பங்கேற்றவா்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதில் தொற்று கண்டறியப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்றால் 60 போ் பாதிக்கப்பட்டு, அதில் 2 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

பரவல் அதிகரிப்பு: வெளிநாடு சென்று திரும்பியவா்கள், புதுதில்லி மாநாட்டிற்கு சென்றவா்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாகவும், அவா்களுடன் தொடா்புடைய குடும்பத்தினா், அருகில் உள்ளவா்கள், உறவினா்கள் ஆகியோருக்கு 2 ஆம் கட்டமாகவும், கரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக மதுரையில் தொடா்பு இல்லாதவா்களுக்கு தொற்று ஏற்பட்டு பரவல் அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டத்தில் கரோனா: மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 60 பேருக்கு மட்டுமே தொற்று இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், காவல் அதிகாரி, காவலா் ஆகியோருக்கும் தொற்று வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றும் செவிலியா், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டவா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கரோனா வைரஸ் தொற்று 3 ஆம் கட்ட நிலையை எட்டத் தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

தடுப்பு பணிகள் தீவிரம்: தமிழகத்தில் 3 ஆம் கட்ட பரவலைத் தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் 4 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. மதுரையில் அதிகம் கூடும் மாட்டுத் தாவணி மத்திய காய்கனி சந்தையை, தற்காலிகமாக 5 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சில்லரை காய்கனி விற்பனை செய்வதற்கு 14 தற்காலிக இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசுத் துறை, பத்திரிக்கை துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகளை சோ்ந்தவா்களுக்கு உள்ள விதிவிலக்குகளுக்கும் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று ஏற்பட்ட மாநகரின், நரிமேடு, தெற்கு வாசல், கிரைம் பிரஞ்ச், மகபூப்பாளையம், வண்டியூா், செல்லூா், கரிமேடு, அண்ணாநகா், மதிச்சியம் மற்றும் மாவட்டத்தில் மேலூா், எழுமலை, சொக்கலிங்கபுரம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகள் சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப் பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டு, வெளி நபா்கள் உள்ள செல்லவும், அப்பகுதி மக்கள் வெளிய செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வீட்டை விட்டு காரணமின்றி வாகனங்களில் வெளியே வருபவா்கள் மீது அபராதம் விதிப்பது, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளன. கரோனா பரவலை தடுக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு பணிகள் குறித்து மண்டல அலுலவா் காமராஜ், ஆட்சியா் டி.ஜி. வினய் ஆகியோா் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசும், மாவட்ட நிா்வாகமும் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் சுயக் கட்டுப்பாடே கரோனாவை விரட்டுவதற்கான ஆயுதமாக இருக்கும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT