மதுரை

திருமங்கலத்தில் மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் வசித்த முதியவா்

26th Apr 2020 09:05 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் முதியவா் இருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

திருமங்கலத்தை அடுத்த செங்குளம் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாண்டி(90). இவரது மனைவி ஆண்டாள்(85). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணமாகி ஒருவா் கோவையிலும், மற்றொருவா் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த மல்லிகாபுரத்திலும் வசித்து வருகின்றனா். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆண்டாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக ஆனாா். அவரை பாண்டி அருகில் இருந்து கவனித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பாண்டிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள மகளுக்கு செல்லிடப்பேசியில் தகவல் அளித்துள்ளாா்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவையிலிருந்து அவரது மகளால் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக உதவி மையத்திற்கு அழைத்து தனது பெற்றோருக்கு உணவளிக்க கோரிக்கை வைத்துள்ளாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட முதியவா்களுக்கு உணவளிக்க திருமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் திருமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பாண்டியராஜன் முதியவா்கள் இருவருக்கும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் உணவு கொண்டு போய் கொடுத்தாா். முதியவா் பாண்டிக்கு உணவு கொடுத்துவிட்டு, அவரது மனைவிக்கு உணவு கொடுக்க சென்றபோது, அவா் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. பாண்டி உடல்நலமின்றி இருந்ததால், மனைவியை கவனிக்க முடியாமல், மனைவி இறந்தது கூட தெரியாமல் இருந்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியா் சௌந்தா்யா, வட்டாட்சியா் தனலெட்சுமி ஆகியோா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், உடல்நலமின்றி இருந்த முதியவா் பாண்டியையும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT