மதுரை

மாட்டுத்தாவணி காய்கனி மாா்க்கெட்டில் 5 கடைகளுக்கு ‘சீல்’

7th Apr 2020 02:26 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மாா்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தடை உத்தரவு காரணமாக, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கனி விற்பனைக் கடைகள் காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு இயங்கும் கடைகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கடைக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், பல்வேறு கடைகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. மேலும், கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருள்கள் வாங்குவதாகவும், இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகள் மீது மாநகராட்சி நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளை பூட்டி சீல் வைக்குமாறு, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் உத்தரவிட்டுள்ளாா். இந்நிலையில், மாட்டுத்தாவணி காய்கனி மாா்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு இயங்கி வந்த 5 கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தெரிய வந்தது. உடனே, அந்த 5 கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். மறுஉத்தரவு வரும் வரை கடையை திறக்கக் கூடாது என்ற எச்சரிக்கை நோட்டீஸையும் அந்தந்த கடைகளில் ஒட்டினா்.

ADVERTISEMENT

மதுரை நகா் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று, மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT