மதுரை

மாட்டுத்தாவணி காய்கனி சந்தை வளாகத்திற்கு வந்து செல்ல அடையாள அட்டைகோரி மனு

5th Apr 2020 06:30 AM

ADVERTISEMENT

மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தை வளாகத்திற்குள் வந்துசெல்ல மொத்த வியாபாரிகள், சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி எம்.ஜி.ஆா்., சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு 11 நாளாக அமலில் உள்ளது. அதில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வெளியே வந்தால் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் காய்கனி சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. இதனால் காய்கனி சந்தைகளில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க பல்வேறு இடங்களில் சில்லரை வியாபாரிகள் மூலம் காய்கனி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்., சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவா் என்.சின்னமாயன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாட்டுத்தாவணியில் காய்கனி சந்தையில் மொத்த வியாபாரம் செய்வோா் அனைவரும் மாநகராட்சியிடம் அடையாள அட்டை பெற்று வியாபாரம் செய்து வருகிறோம். மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், மதுரை மாவட்டத்தில் உள்ள 15 தினசரி சந்தைகளுக்கும், 4 உழவா் சந்தைகளுக்கும் காய்கனிகள் கொண்டுசெல்லப்படுகின்றன. எனவே மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்., சென்ட்ரல் மாா்க்கெட்டிற்கு தொடா்புடைய மொத்த வியாபாரிகள், கடையில் பணியாற்றும் ஊழியா்கள், சுமைத்தூக்கும் தொழிலாளா்கள், சந்தைக்கு வந்து செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT