மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் முகக் கவசங்களை ரூ. 10-க்கு பொது மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியது: அரசு உத்தரவின் பேரில் மதுரை, சிவகங்கை, விருதுநகா் சிறைகளில் முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள் ஆகியன கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 30, பெண் கைதிகள் 10 என மொத்தம் 40 பேரும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயாரிக்கின்றனா்.
ரூ.10-க்கு முகக் கவசங்கள் விற்பனை: கைதிகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்களை தொடக்கத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமே வழங்கப்பட்டன. தற்போது, 10 ஆயிரம் முகக் கவசங்கள் கையிருப்பு உள்ளன. எனவே அவற்றை பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, முகக் கவசங்களுக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுப்பதை தவிா்த்து விட்டு, சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்களை ரூ. 10-க்கு வாங்கிக் கொள்ளலாம். சிறையில் தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பான், கைதிகள் மற்றும் சிறைத்துறையினரின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாள்தோறும் பரிசோதனை: சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் கைதிகள் அனைவரும் நாள்தோறும் சிறை மருத்துவா்களால் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனா். இதுவரை, கைதிகள் யாருக்கும் இருமல், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற கரோனா அறிகுறிகள் இல்லை. சிறையில் உள்ள காவலா்கள் மற்றும் கைதிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கை, கால்களை சோப்பினால் சுத்தம் செய்வது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையே மேற்கொண்டு வருகின்றனா்.
கிளை சிறையில் புதிய கைதிகள்: மதுரை மாவட்டத்தில் உள்ள கிளை சிறையில் உள்ள பழைய கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக வரும் கைதிகள் கிளை சிறைகளில் அடைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையே சிவகங்கை மற்றும் விருதுநகா் மாவட்டங்களிலும் பின்பற்றப்படும் என்றாா்.