மதுரையில் பொதுமக்கள் சந்தையில் கூட்டமாக கூடுவதை தவிா்க்கும் வகையில் புதன்கிழமை முதல் (ஏப்.1) 19 வகையான காய்கனிகள் அடங்கிய தொகுப்பு பை ரூ.250-க்கு மாநகராட்சி சாா்பில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மதுரையில் காய்கனி கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிா்க்கும் வகையிலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையிலும் வாா்டுகள் வாரியாக நடமாடும் காய்கனி வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், சௌசௌ, பீட்ரூட், கருவேப்பிலை, மல்லித்தழை, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், தேங்காய், புதினா, இஞ்சி, புடலங்காய் என 19 வகையான காய்கனிகள் அடங்கிய மொத்த காய்கனி தொகுப்பு பை ரூ.250 என மக்களுக்கு வழங்க மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
தன்னாா்வலா்கள், விளாங்குடி மொத்த காய்கனி விற்பனையாளா்கள் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து முதற்கட்டமாக புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் 10 வாா்டுகளில் 10 மாநகராட்சி நடமாடும் காய்கனி வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை இத்தொகுப்பு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.