மதுரை மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் உள்பட 1400 காவலா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2 போலீஸாருக்கு லேசான காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதால் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.
மதுரை மாநகர காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவின்பேரில், மதுரை காவல்துறையின் மருத்துவக் குழுவினா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றும் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்களா் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனா்.
தலைமை மருத்துவா் கீதா தலைமையிலான குழுவினா் காவல் அதிகாரிகள் உள்பட 1400 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். குறிப்பாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதா எனப் பரிசோதித்தனா். அதில் மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள 2 போலீஸாருக்கு லேசான காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
அவா்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா். இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலா்களுக்கும் தொடா்ந்து பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தலைமை மருத்துவா் கீதா தெரிவித்துள்ளாா்.