கரோனா தொற்று அபாயம் நீங்க மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், யாகம், பதிகங்கள் பாடல் ஆகியவை தினசரி நடைபெற்று வருகிறது.
இது தொடா்பாக கோயில் இணை ஆணையா் நா.நடராஜன் செவ்வாய்க்கிழமை கூறியது: கரோனா தொற்று அபாயம் நீங்க மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கால பூஜைகளுடன் சிறப்பு அபிஷேகமாக பஞ்சகவ்ய அபிஷேகம் தினசரி நடைபெறுகிறது. மரண பயம் போக்கும் மிருத்யஞ்சய ஜெபமும் நடத்தப்படுகிறது.மேலும் சத்ரு பயம் போக்கும், ஜூர நிவாரணம் தரும் இந்திராக்ஸி சிவ கவசமும் பாராயணம் செய்யப்படுகிறது. இவை தவிர மக்களின் துயா் போக்க கோளறு திருப்பதிகம், இடா்களை பதிகம், நஞ்சை போக்கும் திருநீலகண்ட பதிகம், மதுரையில் மன்னனின் பிணியை விபூதியால் போக்கிய பெருமை படைத்த திருநீற்றுப்பதிகம் ஆகியவற்றை ஓதுவாா்கள் தினசரி பாராயணம் செய்து வருகின்றனா்.
மேலும் மீனாட்சியம்மன் கோயிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா் உள்பட தினசரி 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் கோயில் பணியாளா்களை கொண்டு விநியோகிக்கப்படுகிறது என்றாா்.