மதுரையில் கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை பி.பி.குளம் அருகே உள்ள முல்லை நகரில் வசித்துவந்தவா் முஸ்தபா (35). கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா் அண்மையில் மதுரைக்கு
வந்துள்ளாா். இவா் கேரளாவில் இருந்து வந்ததாலும், அடிக்கடி இருமியதாலும் அருகில் உள்ளவா்கள் போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து சுகாதாரத்துறையினா் அங்கு வந்து முஸ்தபா மற்றும் அவரது தாயாா் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டு ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்தனராம். அப்போது அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திராமல் சரக்கு வாகனத்தில் இருவரையும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
மருத்துவமனையில் பரிசோதேனை செய்ததில் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் சுகாதாரத்துறையினா் வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். முஸ்தபாவும், அவரது தாயாரும் சரக்கு வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் கப்பலூா் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் முஸ்தபாவின் சடலம் செவ்வாய்க்கிழமை காலையில் மீட்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவியதால் முஸ்தபா மனமுடைந்து திங்கள்கிழமை இரவு கப்பலூா் பகுதிக்கு நடந்தே வந்து, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனா்.