மதுரை

கரோனா நிவாரண உதவிக்கு இன்று முதல் வீடுகளில் டோக்கன்: ஆட்சியா் தகவல்

1st Apr 2020 06:52 AM

ADVERTISEMENT

அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் பெறுவதற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளில் புதன்கிழமை முதல் நேரடியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா வைரஸ் நிவாரண உதவியாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 மற்றும் தகுதியான அளவு அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியன ஏப்ரல் மாதத்துக்கு விலை இல்லாமல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 622 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் தலா 100 போ் வீதம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், நோய்த் தொற்றைத் தவிா்க்க வேண்டியுள்ளதாலும் கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் முறை பின்பற்றப்பட உள்ளது. இந்த டோக்கன்கள், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்காரா்களால்

ADVERTISEMENT

ஏப்ரல் 1 முதல் அவரவா் வீடுகளுக்கே நேரில் வந்து தரப்படும். டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரப்படி தினமும் 100 அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை, பொருள்கள் வழங்கப்படும்.

ஆகவே, குடும்ப அட்டைதாரா்கள் பதற்றம் இல்லாமல், பொறுமை காத்து தங்களது டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் நியாயவிலைக் கடைகளுக்குச் செல்ல வேண்டும். டோக்கன் பெறுவதற்காக நியாய விலைக் கடைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நியாய விலைக் கடைக்கு வருவதற்கு முன்பும், பொருள்கள் வாங்கிய பிறகும் கிருமி நாசினி மூலமாக கைகள் மற்றும் மின்னணு அட்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவா்களாகக் கருதப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நபா்களுக்கு மட்டும் அவா்களது வீடுகளுக்கே சென்று நிவாரண உதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்களால் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை அனுமதி பெற்று வழங்கப்படும்.

பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்கு வரும்போது மின்னணு குடும்ப அட்டை மற்றும் டோக்கன் ஆகியவற்றை வாகனச் சோதனையில் இருக்கும் காவல் துறையினரிடம் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அனுமதிக்கப்படமாட்டாா்கள். நிவாரண உதவி மற்றும் பொருள்களைப் பெற சம்பந்தப்பட்ட குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினா் ஒருவா் மட்டுமே நியாய விலைக் கடைக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT