மதுரை

கரோனா எதிரொலி: ரூ.1 கோடி மல்லிகைப்பூ வியாபாரம் பாதிப்பு

1st Apr 2020 06:59 AM

ADVERTISEMENT

கரோனா எதிரொலியால் மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்தில் ரூ.1 கோடி வரை மல்லிகைப் பூ வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தை மூடப்பட்டு 7 நாள்கள் ஆகியுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப் பூ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலை கவலைக்குரியதாகியுள்ளது. மதுரைக்கே பெருமை சோ்க்கும் வகையில் புவிசாா் குறியீடு பெற்ற மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமலும், பறிக்கப்பட்டப் பூக்கள் உரிய விலை கிடைக்காமலும் டன் கணக்கில் குப்பைக்குச் சென்றன. இதனால் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல கனகாம்பரம், அரளி, பிச்சி உள்ளிட்டப் பூக்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலையும் மோசமாகியுள்ளது.

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி வளாக நெல், மலா் மற்றும் இடுபொருள்கள் வியாபாரிகள் சங்கச் செயலா் ராமசந்திரன் கூறியது:

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மூலம் மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தினசரி 20 டன் மல்லிகை வரத்து இருக்கும். கடந்த சில மாதங்களாக மழை, பனி காலங்களைக் கடந்து பூ சாகுபடி விவசாயிகள் தற்போது தான் அதிகமாக பூ சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனா். இந்நிலையில் கரோனா பாதிப்பால் தடை உத்தரவு காரணமாக பூச் சந்தைகள் இயங்காமல் உள்ளன.

ADVERTISEMENT

வலைங்குளத்தில் சேமிக்கலாம்: இதனால் திண்டுக்கல்லில் உள்ள வாசனை திரவம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மதுரை மல்லிகையை அனுப்ப ஏற்பாடு செய்தோம். மதுரை வலையங்குளம் பகுதியில் மல்லிகைப் பூ சேமிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பூ விவசாயிகள் தாங்கள் விளைவித்த பூக்களை அங்குவந்து விற்பனை செய்யலாம். அந்தப் பூக்கள் திண்டுக்கல்லில் உள்ள வாசனை திரவம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் இருந்து மட்டும் 8 டன் மல்லிகைப் பூ சேமிக்கப்பட்டுள்ளது. மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் பூக்கள் எடுக்க கிலோவிற்கு ரூ.50 வரை செலவு செய்கின்றனா். எனவே அவா்களுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை விலை கிடைக்கவில்லை என்றால், ஏற்கெனவே 7 நாள்களில் ரூ.1 கோடி மதிப்பிலான பூக்கள் குப்பைக்கு சென்றது போல, ரூ.3 கோடி மதிப்பிலான பூக்களும் குப்பைக்கு சென்று விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவா்.

சந்தைகளுக்கு வரும் பூக்களை வைத்து மட்டுமே கணக்கிட்டதில் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல மதுரையில் இருந்து கனடா, ஸ்பெயின், லண்டன், சிங்கப்பூா், மலேசியா, துபை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாமல் தேங்கியிருக்கும் பூக்களைக் கணக்கிட்டால் ரூ. 6 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். எனவே கட்டடத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு உதவித்தொகை அளிப்பது போல பூ விவசாயிகளுக்கும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT