தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் போது மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழகத்தில் 37 ஆயிரத்து 300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டியில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் பேசியது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளிநாட்டில் உள்ள உள்கட்டமைப்புகளை தமிழகத்தில் செயல்படுத்திடவும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் தலைசிறந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் அமெரிக்கா, லண்டன், துபை போன்ற நாடுகளுக்குச் சென்றார். அவர் 13 நாள்கள் மேற்கொண்ட தொடர் பயணத்தில் ரூ. 8 ஆயிரத்து 830 கோடி அளவில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் 37 ஆயிரத்து 300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். கூட்டத்தில் அமைப்பு செயலர் ம.முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலர் ஐயப்பன், ஒன்றியச் செயலர் மகாலிங்கம், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.