இளமைப்பருவத்தில் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் கல்வி கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதுமுனைவர் இரா.இளங்குமரனார் பேசினார்.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் 119ஆம் ஆண்டுத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முகவை மன்னர் நா.குமரன் சேதுபதி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரியின் செயலர் ராணி ந.லெட்சுமி குமரன் சேதுபதி, தமிழ்ச்சங்க செயலர் வழக்குரைஞர் ச.மாரியப்ப முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நான்காம் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது சிறப்புரையில், மாணவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். படிப்பதற்கு வயது வரம்பு கிடையாது. இளமைப் பருவத்தில் நேரத்தை வீணாக்காமல் கல்வி கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியது: கடந்த நூறு ஆண்டுகளில் மதுரைக்கு பெருமை சேர்த்த ஒரே நிறுவனமாகத் திகழ்வது மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மட்டுமே. மதுரை, தமிழ், தமிழின் பெருமை இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வைத்து எண்ணப்பட வேண்டியவை. பல பல்கலைக் கழகங்கள் செய்த சாதனையை தமிழ்ச்சங்கம் மட்டுமே செய்துள்ளது. கல்வி சார்ந்த தமிழ்ப்பணி ஆற்றியதில் தலைமையகமாக தமிழ்ச்சங்கம் விளங்குகிறது. இங்குள்ள பாண்டியன் நூலகத்தை போன்று வேறு சிறப்பான நூலங்கள் மிக அரிதாகவே உள்ளன. வேறு எங்கும் கிடைக்கப் பெறாத அரிய நூல்களின் பெட்டகமாக இந்த நூலகம் விளங்குகிறது. பல்வேறு தமிழ் ஆளுமைகள் பணியாற்றியது இக் கல்லூரி. இதை உணர்ந்து மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். தமிழ்ச் சங்க ஆண்டுவிழா கல்லூரி மட்டும் கொண்டாடும் விழா அல்ல தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய விழா என்றார்.
முதல்வர்(பொறுப்பு) கி.வேணுகா வரவேற்றார். துணை முதல்வர் கோ.சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.