மதுரை பீபீ குளம் சந்திப்பில் ரூ.50 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கூட்ட அரங்கு கட்டும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தலைமை வகித்தார்.
இதில் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா கட்டுமானப் பணியை தொடக்கி வைத்துப் பேசியது: மதுரை மாநகராட்சி வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் புதிய கூட்ட அரங்கு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் ஏற்கெனவே நவீன குளிரூட்டப்பட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. பள்ளியின் அருகில் உள்ள பீபீ குளம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு உரிய அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு விதித்துள்ள அனைத்து சட்ட விதிமுறைகளையும் அனைவரும் பின்பற்றுவோம். இதற்கு அனைத்து வணிகத் துறையினரும், இதர அமைப்பினரும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர், அரசு, கல்வி அலுவலர் பொ.விஜயா மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.