மதுரை

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் "கிரயோ பயாப்ஸி'

17th Sep 2019 10:06 AM

ADVERTISEMENT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழகத்தில் முதல் முறையாக நுரையீரலில் புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் "கிரயோ பயாப்ஸி' முறை திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் "கிரயோ பயாப்ஸி' கருவியை முதன்மையர் கே.வனிதா இயக்கி, அதன் செயல்பாட்டைத் தொடக்கி வைத்தார். 
இது குறித்து நுரையீரல் துறை தலைவர் மருத்துவர் பிரபாகரன் கூறியது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை பிரிவில்தான் முதன்முறையாக இச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள இந்த நவீன கருவி தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் மூலம் ஈட்டப்பட்ட தொகையில், மதுரை மாவட்ட ஆட்சியரின் தன்னிறைவு திட்டத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. 
"கிரையோ பயாப்ஸி' என்பது நுரையீரல் புற்று நோயை துல்லியமாக கண்டறிய செய்யப்படும் திசு எடுக்கும் முறை. "பிரான்ங்கோஸ்கோபி' எனப்படும் சுவாசக்குழாய், உள் நோக்கும் கருவி மூலம் குளிர்ச்சியை உண்டாக்கி திசு எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யும் முறை "கிரையோ பயாப்ஸி'. 
சாதாரண முறையில் செய்யப்படும் பயாப்ஸி முறையில் நுரையீரல் கட்டி எந்த வகையானது என்பது 75% மட்டுமே சரியான முறையில் கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் இரண்டாம் முறையும் பரிசோதனை திரும்ப செய்ய வேண்டியுள்ளது. ஆனால் "கிரையோ பயாப்ஸி' முறையில் 97% என்ன வகையான புற்று நோய் என்பதை சரியாக கணிக்கப்படுவதால், நோயாளியின் சிரமம் குறைகிறது. இந்த "கிரையோ பயாப்ஸி' முறை திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT