சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் 6 இளைஞர்கள் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் அல்லூர்பனங்காடியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, ஆட்டோவில் வந்த கும்பல் ராஜசேகரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து சிவகங்கை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சிவகங்கையைச் சேர்ந்த அருள் (30), பரமசிவம் (27), ஆனந்தபாபு (32), அரவிந்த் (29), அருண்பாண்டி (20), வசந்த் (24), பிரவீண்(20) ஆகியோர் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.