மதுரை

குடியிருப்பு பகுதியை அழித்து தேசிய நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு: சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனு

17th Sep 2019 10:02 AM

ADVERTISEMENT

மதுரையில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு பகுதியை அழித்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:  மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நில எடுப்பு அலுவலரால் ஆகஸ்ட் 31-இல் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலை 49(விஸ்தரிப்பு) புதிய தேசிய நெடுஞ்சாலை எண் 85-இல் மதுரை மாவட்டம் மேற்கு வட்டத்தில் அமைந்துள்ள பொன்மேனி, கொக்குளப்பி, கோச்சடை, ஏற்குடி, சம்பக்குடி, விளாச்சேரி, வடிவேல் கரை ஆகிய 7 கிராமங்களில் சாலை அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதில் மாநகராட்சி வார்டு 22 விராட்டிப்பத்து கொக்குளப்பி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் 100 குடும்பங்களுக்கும் மேலாக வசிக்கும் பகுதியை அழித்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் முதல் தலைமுறையாக தாழ்த்தப்பட்டோர் மிகவும் கஷ்டப்பட்டு சொந்தமாக  வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி அரசு பதிவேட்டில் "ஸ்லம்' (சேரி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை நேராக 
இல்லாமல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு வழியாக வளைந்து செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை தொலை நோக்குத் திட்டமாக கருத இயலாது. மேலும் பொதுமக்கள் புரிந்து கொள்ள இயலாதவாறு சர்வே எண்களை குழப்பாக வெளியிட்டுள்ளனர். 
எனவே பொதுமக்கள் வெளிப்படையாக புரிந்துகொள்ளுமாறு  சாலை அமைக்கப்படுவதை பொதுவான குழு அமைத்து மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை பாதிக்காதவாறு சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT